Monday 22 August 2011

ஹசாரேவின் 6 வது நாள் உண்ணாவிரதம் 50,000௦,௦௦௦௦ க்கு மேல் மக்கள் வெள்ளம்


ஆகஸ்ட் 30 ம் திகதிக்குள் வலுவான லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யவேண்டும். இல்லையேல்
முன்னுதாரணமற்ற மக்கள் புரட்சியை சந்திக்க நேரிடுமமென அன்னா ஹசாரே மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். இன்று ராம் லீலா மைதானத்தில் 6வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்த அவர், இந்தியா கேட்டிலிருந்து, மைதானம் வரை நடைபெற்ற மக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஹசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ராம்லீலா மைதானம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 50,000 ற்கு மேற்பட்ட மக்கள் ஒன்றிணைந்தனர். 

அதன் போது மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், அரசாங்கம் ஊழலுக்கு எதிராக போராடுவதற்கு, அதன் நோக்கம் நேர்மையானதாக இருக்கவில்லை.

கடந்த ஏப்ரலில் நான் முதலாவது உண்ணாவிரதத்தை தொடக்கிய போது, லோக்பால் சட்ட மசோதாவுக்கான குழுக்கள் அமைப்பதற்கு அரசு இணக்கம் தெரிவித்தது. இரு மாதங்களாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால்  அவர்கள் சிவில் சமூகத்தினரை ஏமாற்றிவிட்டார்கள்.

நான் கடந்த செவ்வாய்க்கிழமை, கைது செய்யப்பட்ட போது வருத்தப்படவில்லை. யார் குற்றங்கள் செய்தார்களோ அவர்கள் தான் கைது செய்யப்படும் போது வருத்தப்பட வேண்டியவர்கள். நாங்கள் நாட்டுக்காக  சிறை செல்வதில் பெருமை அடைகிறோம்.

இப்போது எமது போராட்டம், தொடங்கிவிட்டது. இளைஞர்கள் ஊழலுக்கு எதிராக முழுவீச்சில் போராடுவதற்கு தயாராகவே இருக்கிறார்கள்.  எமது லோக்பால் வரைபின் அனைத்து யோசனைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 தடவை திருத்தப்பட்டுள்ளது. எப்படி இருப்பினும் எமது முக்கிய கோரிக்கைகளில் அரசுக்கு உடன்பாடில்லை என்றாலோ அல்லது அவர்கள் வேறு சிறந்த யோசனைகளை முன்வைக்க விருப்பம் தெரிவித்தாலோ நாம் பேசுவதற்கு தயாராகவே இருக்கிறோம் என தெரிவித்தார்.

முன்னதாக அன்னா ஹசாரேவின் போராட்டம் குறித்து பிரதமர் கருத்து தெரிவிக்கையில், சட்ட நடைமுறைகளில் சில சிரமங்கள் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாராளுமன்ற நடைமுறைகளின் படி மசோதாவை நிறைவேற்றி முடிக்க சிறிது காலம் வேண்டும். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.
விட்டுக்கொடுத்து செயல்படுவதன் மூலம் வலிமையான லோக்பால் சட்டத்தை உருவாக்க முடியும் என நம்புகிறேன். சில தடைகளை நீக்கி வலிமையான லோக்பால் சட்டத்தை கொண்டு வர அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி தயாரிக்கப்பட்ட லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் அரசு தாக்கல் செய்துள்ளது. அந்த மசோதா சட்டம் மற்றும் நீதித்துறைக்கான நிலைக்குழுவின் பரிசீலணைக்கு அனுப்பட்டுள்ளது. அதன் மீது யார் வேண்டுமென்றாலும் கருத்து தெரிவிக்கலாம். ஆனால் பாராளுமன்ற நடைமுறைகளுக்கு அனைவரும் மரியாதை செலுத்த வேண்டும் என்றார்.

மேலும் அன்னா ஹசாரே குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அரசு பேச்சுவார்த்தைக்கு தயார் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ள போதும் யாருடன், எப்போது, எங்கு சந்தித்து பேசுவது என்பது குறித்து எமக்கேதும் தகவல் வரவில்லை என அர்விந்த் கேர்ஜ்ரிவால் தெரிவித்தார்.

இதேவேளை லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு கோரி அனைத்து அமைச்சர்களினதும், எம்பிக்களினதும் வீடுகளை முற்றுகையிட கோரி ஹசாரே கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து பிரதமரின் அதிகார பூர்வ இல்லம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய 80 க்கு மேற்பட்டொரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை பிரபல பாலிவூட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஹசாரேவின் நடவடிக்கை மிகவும் அரிதான சுயநலமின்மையை பிரதிலிக்கிறது. நான் அவரை ஆதரிக்கிறேன் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
AddThis Social Bookmark Button

No comments:

Post a Comment