Monday 22 August 2011

ஆட்சிமுறைக்கு எதிரான புரட்சி!

இரண்டாவது சுதந்திரப் போராட்டம்' ஊழலுக்கு எதிரான வலிமையான லோக்பால் சட்டத்தை உருவாக்க நடைபெறும் தமது போராட்டத்தை இப்படிச் சொன்னார் அண்ணா ஹசாரே. ஊழல், வறுமை, வேலைவாய்ப்பின்மை, பயங்கரவாதம் என எத்தனையோ விஷயங்களில் இருந்து சுதந்திர இந்தியா விடுபட வேண்டியுள்ளது. அவற்றிலும் முதலில் ஒழித்துக்கட்ட வேண்டியது ஊழலைத்தான். அந்த வகையில், இந்தப் போராட்டத்தை இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பம் என்று சொல்வது சாலப் பொருந்தும்.

இந்தியாவுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த கட்சி காங்கிரஸ் கட்சி என அதன் தலைவர்கள் அடிக்கடி பெருமைப்பட்டுக் கொள்வது உண்டு. லோக்பால் மசோதாவுக்கு எதிரான ஹசாரேவின் போராட்டத்தை அதிகாரத்தைக் கொண்டு நசுக்க முயன்றதன் மூலம் இரண்டாவது சுதந்திரப் போராட்டமாக அதைத் தொடங்கிவைத்த பெருமையும் இப்போது காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்துள்ளது.
ஊழல் செய்பவர்கள், அதனால் பலன் அடைபவர்கள் தவிர அத்தனை பேரும் ஊழலை வெறுக்கிறார்கள். அதன் எதிரொலிதான் அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பரவிய எழுச்சி. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பெரியவர்கள் என வீதிக்கு வந்து போராடியபோது அவர்களது முகங்களில்தான் எத்தனை ஆவேசம். "அண்ணா வழி எங்கள் வழி', "உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்' என அவர்கள் ஏந்தி வந்த பதாகைகளில்தான் எத்தனை உறுதிகள்.
பொதுவாக இந்தியர்கள் எந்த விஷயத்துக்கும் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள் அல்லர். ஆனால், இப்போது எழுந்துள்ள உணர்ச்சி, ஊழலுக்கு எதிரானது. சுதந்திர இந்தியாவைச் சுரண்டிச் சுரண்டித் தின்னும் ஊழல் கரையான்களுக்கு எதிரானது. நாட்டின் ஒட்டுமொத்த வளத்தையும் அதிகாரவர்க்கத்தின் பக்கம் கொண்டுசெல்லத் துடிக்கும் தீயசக்திகளுக்கு எதிரானது.
சுதந்திர தினத்தையொட்டி உரையாற்றிய குடியரசுத் தலைவர் "ஊழல் ஒரு புற்றுநோய், அதை அழிக்கும் சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்துக்குதான் அதிகாரம் உள்ளது.' என்றார்.
"ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்; ஆனால், உண்ணாவிரதத்தால் அதை ஒழித்துவிட முடியாது' என்றார் பிரதமர்.
சட்டத்தை நாடாளுமன்றம்தான் உருவாக்க முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஊழலில் இருந்து தப்பிக்கும் வகையிலான ஓட்டைகள் சட்டத்தில் இருக்கின்றன என்பது ஊழல்வாதிகளுக்குத்தானே நன்றாகத் தெரிகிறது. உண்ணாவிரதத்தால் ஊழலை ஒழித்துவிட முடியாது. ஆனால், இதே உண்ணாவிரதம் என்ற அறப்போராட்டத்தால்தானே இந்தியாவுக்குச் சுதந்திரமே கிடைத்தது. ஆங்கிலேயர்களையே விரட்டிய உண்ணாவிரதத்தால் ஊழலை விரட்ட முடியாதா? சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட கட்சி என்று சொல்லும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதமருக்கு இது தெரியாதா?
இப்போதுள்ள சட்டத்தால் ஊழலை ஒழித்துவிட முடியும் என்றால், இந்நேரம் ஊழலே இல்லாத இந்தியா அல்லவா உருவாகியிருக்க வேண்டும்.
இதே நாடாளுமன்றம் உருவாக்கிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் இப்போதைய நிலை என்ன? அதை முழுமையாக அமல்படுத்தாத அதிகாரிகளை இந்தச் சட்டம் என்ன செய்கிறது?
லஞ்சம் வாங்கிப் பிடிபடும் அரசு ஊழியர்கள் வேலையை இழக்கிறார்களா? ஊழல் அரசியல்வாதிகள் பதவியை இழக்கிறார்களா? ஒருசில நாள்களில் அதே வேலையில், அதே பதவியில் அமர்ந்து அதே ஊழலைத் திரும்பச் செய்கிறார்களே... அந்த அளவில்தானே நமது சட்ட நடைமுறைகள் உள்ளன.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற நியாயமான - இன்றைய முக்கியத் தேவையான கோரிக்கையைக்கண்டு ஏன் அரசு இப்படி எரிச்சல் அடைகிறது? யேமனிலும், எகிப்திலும் நடந்த புரட்சிபோல இந்தியாவில் நடக்க வாய்ப்பே இல்லை. இது ஜனநாயக நாடு என்பதால் அதற்கான அவசியமும் இல்லை என்று ஆட்சியாளர்கள் சொன்னார்கள். ஆனால், ஹசாரேவுக்கு ஆதரவாக, ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள எழுச்சி அந்தக் கருத்தை மறுக்கச் செய்திருக்கிறது. யேமனிலும், எகிப்திலும் நடந்தது அடக்குமுறைக்கு எதிரான புரட்சி, இந்தியாவில் இப்போது தொடங்கியிருப்பது ஆட்சிமுறைக்கு எதிரான புரட்சி. இதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நாட்டைச் சீர்திருத்தப் பாதைக்கு அழைத்துச் செல்கிறோம் என்றுகூறி, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் - மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது என்று வெற்றுக் காரணம் சொல்லி விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தெரியாத - சர்வதேச பிரச்னைகளில் தலையிடவே செய்யாமல் பேசாமடந்தையாக இருந்து இந்தியாவின் மதிப்பைக் குலைக்கும் - இந்திய மீனவர்களை அந்நிய நாட்டு கடற்படை சுட்டுக் கொன்றும் அதைப்பற்றி கவலைப்படாமல் இருக்கும் ஆட்சியாளர்கள் மக்களுக்குத் தேவையில்லை. ஊழலை ஒழிப்போம்; நாட்டை சுத்தப்படுத்துவோம் என்று புறப்பட்டு, ஒரே நாளில் தேசமெங்கும் தேசப்பற்றை கிளர்ந்தெழச் செய்துள்ள அண்ணா ஹசாரேக்கள்தாம் இன்றையத் தேவை.

No comments:

Post a Comment