Monday, 22 August 2011

அறவழிப் போராட்டமே வெற்றி தரும்!

அண்மையில் நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மசோதாவின் நகல்களை, சமூக சேவகரான அண்ணா ஹசாரேயும் அவரது தலைமையிலான மக்கள் பிரதிநிதிகள் குழுவினரும் எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

 பிரதமர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் அதிகாரிகளை விசாரிக்கும் வகையில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்ததை அடுத்து அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஹசாரே மற்றும் அவரது குழுவினர் கூறியதுடன் நில்லாமல், நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும் இதுபோன்ற நகல் எரிப்புப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளது கவலை அளிக்கும் விஷயமாகும்.
 லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும், நீதித்துறையினரையும் கொண்டுவராமல் மசோதா தாக்கல் செய்துள்ளதற்கு பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
 பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது பிரதமரையும் விசாரணை வரம்புக்குள் கொண்டுவரும் லோக்பால் மசோதாவுக்கு அப்போது நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருந்த பிரணாப் முகர்ஜி ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 மிகவும் பலவீனமான ஒரு மசோதாவைக் கொண்டு வந்து மத்திய அரசு மக்களை ஏமாற்றுவதாக ஹசாரே கூறியுள்ளதை ஒருவகையில் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பிரதமரை லோக்பால் மசோதாவுக்குள் கொண்டு வரவேண்டும் என்பது அண்ணா ஹசாரேயின் நோக்கம். ஆனால், பிரதமர் உள்ளிட்டோர் சி.பி.ஐ. விசாரணை வரம்புக்குள் வந்துவிடுவதால் அவர்களை இதில் சேர்க்கத் தேவையில்லை என்பது மத்திய அரசின் வாதம்.
 ஊழலுக்கு எதிரான இயக்கத்தைக் கண்டு மத்திய அரசு பயப்படவில்லை. ஆனால், மக்கள் விரும்பும் லோக்பால் மசோதாவைக் கொண்டுவந்தால் ஆட்சி அதிகாரம் கையில் இல்லாமல் போய்விடுமோ என்றுதான் பயப்படுகிறது.
 மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை வீழ்த்த வேண்டும் என்பது ஊழலுக்கு எதிரான ஹசாரே இயக்கத்தவரின் நோக்கம் அல்ல; நாடாளுமன்ற நடைமுறைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்; ஊழல்பேர்வழிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினரின் முக்கிய கோரிக்கையாகும்.
 தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஆக. 16 முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும், அது உரிய பலன் அளிக்கவில்லையெனில் நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தவும் தயாராக இருப்பதாக அண்ணா ஹசாரே மற்றும் அவரது இயக்கத்தினர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
 "ஊழலுக்கு எதிராக வலுவான, அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் லோக்பால் மசோதாவை உருவாக்கி நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. இதை வலியுறுத்தி நான் கடந்த ஏப்ரல் மாதம் உண்ணாவிரதம் இருந்தபோது மத்திய அரசு, என்னை சமாதானப்படுத்தி அப்படியே செய்வதாக உறுதியளித்தது. ஆனால், இப்போது பெயரளவில் பலவீனமான ஒரு மசோதாவைக் கொண்டுவந்துள்ளது. இதனால் எந்தப் பலனும் இல்லை' என்கிறார் ஹசாரே.
 எப்படியிருந்தாலும் சிறந்த சமூக சேவகரும், காந்தியவாதியுமான அண்ணா ஹசாரேயும், அவரது மக்கள் பிரதிநிதிகள் குழுவினரும் நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டது மனதிற்கு வருத்தத்தை அளிக்கிறது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அவர் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கதுதான். எதிர்ப்பைக் காட்ட அவர் செய்த காரியம் முறையானது அல்ல.
 பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டுத் துணிகளை எரித்து நம்மவர்கள் போராட்டம் நடத்தவில்லையா என்று சிலர் கேட்கலாம். அது ஒருவகையில் நியாயமானதுதான். ஏனெனில் அந்தக் காலத்தில் கதர் ஆடைகளை மக்களிடையே பிரபலப்படுத்தவும், அதன் மூலம் லட்சக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் வழியேற்பட்டது. ஆனால், இப்போதைய சூழ்நிலை அப்படியல்ல; அரசு தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதா சக்கரங்கள் இல்லாத ரயில்போன்றது. இந்த மசோதா மூலம் ஊழலை ஒழித்துவிடமுடியாது. ஆனால் எதிர்ப்பைக் காட்டுவதற்கு மசோதா எரிப்புப் போராட்டம் என்பது முறையானது அல்ல; அதற்கு வேறு எத்தனையோ வழிகள் உள்ளன.
 ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்துக்கும், அவர் யோசனை தெரிவித்துள்ள லோக்பால் மசோதாவுக்கும் அதாவது பிரதமர், நீதித்துறையினர் உள்ளிட்டோரையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்ற அவரது கோரிக்கைக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் நகல் எரிப்புப் போராட்டம் என்று சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளில் அவரும் அவரது குழுவினரும் ஈடுபட வேண்டிய அவசியம் என்ன?
 ஊழல் என்பது ஏதோ இந்தியாவில் மட்டும் இருந்து வரும் பிரச்னை அல்ல. சீனா, ரஷியா என பல்வேறு நாடுகளிலும் இது பரவியுள்ளது. ஊழலுக்கு எதிரான பிரசாரம் தொடங்கியுள்ளது நல்ல அறிகுறிதான். ஆனால், ஊழல் என்னும் பெருச்சாளியை அவ்வளவு எளிதில் ஒழித்துவிட முடியாது. ஊழல் என்பது சர்க்கரை நோய் போன்றது. அதை கட்டுப்படுத்தலாமே தவிர, முற்றிலுமாக ஒழித்துவிட முடியாது.
 ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அண்ணா ஹசாரேயும் அவரது குழுவினரும் அறவழியில் நடத்திச் சென்றால் அதற்கு ஆதரவு பெருகும். மக்கள்சக்தி இயக்கமாக அது உருவாகும். இதன்மூலம் மத்திய அரசு அடிபணிந்து தற்போதைய லோக்பால் மசோதாவுக்குப் பதிலான புதிய வலுவான மசோதாவைக் கொண்டு வரும் வாய்ப்பு உள்ளது.
 மசோதா நகல் எரிப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தால் மக்கள் ஹசாரேயை அரசியல் கண்ணோட்டத்துடன்தான் பார்ப்பார்களே தவிர, தேசநலனுக்காகப் பாடுபடும் தலைவராகப் பார்க்க மாட்டார்கள். இதை ஹசாரேயும் அவரது குழுவினரும் நினைவில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment